கோயம்புத்தூர்: நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). இவர் சிறுமுகை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது தங்கை பாக்கியா (45). இவர் சிறுமுகையில் அரசு மருத்துவமனை எதிரே புதிதாக வீடு வாங்கி உள்ளார். இந்த வீட்டிற்கு பால் காய்ச்சும் நிகழ்வில் பங்கேற்க, சிறுமுகைக்கு இவரது மருமகள் ஜமுனா (25), நண்பர்கள் நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கஸ்தூரி (30), சகுந்தலா (40) ஆகியோர் நேற்று (பிப் 11) சென்றுள்ளனர்.
அப்போது இவர்கள் 3 பேருடன் சேர்ந்து பாலகிருஷ்ணன் மற்றும் பாக்கியா சிறுமுகை வச்சினாம்பாளையம் பகுதியிலுள்ள பவானி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். பில்லூர் அணையில் தண்ணீர் திறந்து விட்டதையொட்டி பவானி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் பாக்கியா (53), சகுந்தலா (40), ஜமுனா (30) ஆகியோரின் உடலை மீட்டனர். பாலகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சிறுமுகை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போன்று கோவையைச் சேர்ந்த ஐடிஐ மாணவர்கள் 6 பேர் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள உப்புபள்ளம் பகுதியில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் மாணவர்கள் சிக்கியுள்ளனர். அதிலிருந்து நான்கு பேர் தப்பிய நிலையில் 2 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாயமான இரு மாணவர்களையும் தேடி வருகின்றனர். ஆற்று வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் கெளதம், மற்றொருவர் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ஜீவானந்தம் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பாஜக - திமுக தரப்பினரிடையே மோதல் - நடந்தது என்ன?