கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செங்காளிபாளையம் பகுதியில் வேலுச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பழைய அட்டைப்பெட்டிகள் சேகரித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த தோட்டத்தில் வேலுச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், இன்று மாலை திடீரென அட்டைப்பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளன.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். அப்போது தீயை அணைத்துக் கொண்டிருந்த கண்ணன் என்ற தீயணைப்பு வீரர், கால் தவறி நெருப்புக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சக தீயணைப்பு வீரர்கள் கண்ணனை மீட்டு கோவில்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் கண்ணனின் கை மற்றும் கால்களில் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்தில் சில லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டை பெட்டிகள் எரிந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் முழுமையான விசாரணைக்கு பின்னரே சேத மதிப்பு தெரிய வரும் என்றும், தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அன்னூர் போலீசார் தெரிவித்தனர்.