கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் புகை சூழ்ந்து உள்ளதை கண்டு, மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த பொள்ளாச்சி தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், ரத்த வங்கி முழுவதும் தீ பிடித்து புகை மண்டலமாக இருந்ததால், பணியில் சிறிது நேரம் தொய்வு ஏற்பட்டது.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு பொள்ளாச்சி தீயணைப்புத்துறையினர், புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து மேற்கொண்ட முதற்கட்ட ஆய்வில் ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது. மேலும் தீ விபத்து காரணமாக அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 69யூனிட் ரத்தம் சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை அலுவலர்கள் தெரிவித்தனர். அதையடுத்து இந்த தீ விபத்து குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.