கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில் பொதுமக்கள் யாரும் முகக்கவசங்கள் அணியாமல் வெளியில் வரக் கூடாது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசமின்றி வெளியில் வந்தாலோ, பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இது குறித்து முன்னதாகத் தெரிவித்திருந்தார்.
எனவே பொது மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வெளியில் நடமாட வேண்டும் என்றும், வாகனங்களில் செல்லும்போதும் பேருந்துகளில் பயணிக்கும்போதும் முகக் கவசங்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும் கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (செப்.27) முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய நபர்கள், வாகன ஓட்டிகளை காவல் துறையினர் நிறுத்தி தலா 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தனர். மேலும் இனி வாகனங்களில் செல்லும்போதும், வெளியில் நடமாடும்போதும் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
வைரஸ் பரவல் மாநிலத்தில் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது பாராட்டத்தக்கது என்று அப்பகுதி மக்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.