கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருபிரிவினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஜன.8 (சனிக்கிழமை) பள்ளிக்கு வெளியே மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவரிடம் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.
அந்த முன்னாள் மாணவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மற்றொரு பிரிவு மாணவர்களை தன் பையில் மறைத்து வைத்திருத்த கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த மூன்று மாணவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஒரு மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இரண்டு மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
இந்நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர் நேற்று (ஜன.10) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து மாணவனின் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
பள்ளி நிர்வாகம் தரப்பில் சரியான விளக்கம் தரவில்லை எனவும், மருத்துவமனைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் செய்த பின், போராட்டத்தைக் கைவிட்டு மாணவரின் உடலை வாங்கிச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ததை கொலை வழக்காக மாற்றி, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: நரேந்திர மோடியை படுகொலை செய்ய திட்டம் - பகீர் கிளப்பும் ஹெச். ராஜா