கோவை: ஆனைகட்டி அருகே சேம்புகரை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் நடத்திய ஆய்வில், யானையின் வாய், ஆசனவாய் பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டது. ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் பெண் யானை உயிரிழந்து கிடந்ததால், வனத்துறையினர் உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
பரிசோதனை முடிவுக்குப் பின்னரே உடற்கூராய்வு
இதுகுறித்து வன அலுவலர் வெங்கடேஷ் பேசுகையில், 'யானைக்கூட்டத்தில் இருந்த பெண் யானை, தனியாக நகர்ந்து வந்து நோய்வாய்ப்பட்டு இருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றன. யானையின் உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே ஆந்த்ராக்ஸ் தொற்று பரவல் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து தெரியவரும். பின்னரே யானைக்கு உடற்கூராய்வு நடத்தப்படும்' என்றார்.
வனத்துறையினர் அதிர்ச்சி
இன்று (ஜூலை 13) பிற்பகலுக்குள் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இறந்த பெண் காட்டு யானைக்கு 13 வயது இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
ஆந்த்ராக்ஸ் அறிகுறிகளுடன் காட்டு யானை இறந்து கிடந்த சம்பவம், வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் ஆண் யானை உயிரிழப்பால் சோகம்