கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணபதிபாளையம் நார்த்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர், விவசாயி தங்கவேலு. இவர் தனது மகன் நந்தகுமாருடன் காலை 6 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோயிலுக்குச் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனம் கிட்டாம்பாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இருந்து கருமத்தம்பட்டி செல்வதற்காக, வலது புறத்தில் இருசக்கர வாகனத்தை திருப்பி உள்ளார்.
அப்பொழுது பொள்ளாச்சியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் முன்சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தந்தையும், மகனும் உயிரிழந்தனர். அதன் பிறகு இந்த விபத்து குறித்து சாலையில் இருந்தவர்கள் காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலறிந்த வந்த கருமத்தம்பட்டி போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி ஓட்டுநர் செல்வம் என்பவரை கைது செய்து, கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் மாணவர்களை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் கேம்பஸ் இன்டர்வியூவில் கலந்து கொள்ள வைப்பதற்காக கல்லூரி பேருந்தில் அழைத்துச்சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் விபத்தில் உயிரிழந்த நந்தகுமார், நடிகர் விஜயகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''திருச்சி மைசூர் செல்லக்கூடிய இந்த நெடுஞ்சாலையில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. அப்படியே வேகத்தடை அமைத்து இருந்தாலும், மிளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர்'' எனத் தெரிவித்தனர். இதனிடையே தந்தையும், மகனும் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்கும்போது பேருந்து மோதும் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தருமபுரியில் ஆணுறுப்பை வெட்டி கொடூர கொலை.. வனப்பகுதியில் நடந்தது என்ன?