புதுமண தம்பதிகளுக்கு தக்காளி ,சின்ன வெங்காயம் பரிசு: அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்த விவசாயிகள்! - coimbatore news
கோவையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தம்பதிகளுக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் பரிசாக வழங்கி அதன் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசுக்கு நூதன முறையில் கோரிக்கை விடுத்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் திருமண தம்பதிகளுக்கு சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி பரிசாக வழங்கி அதன் விலை உயர்வு குறித்தும் விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகம் மட்டும் இன்றி வட மாநிலங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி சுமார் 200 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. அதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய் வரை விற்பனையாகிறது.இந்த விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாத எழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தீர்வு காண வெண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபுரம் தமிழக விவசாயிகள் விளைநிலங்களில் இறங்கி கஷ்டப்பட்டு தக்காளி சின்ன வெங்காயம் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உற்பத்தி செய்கிறோம், ஆனால் இடைத்தரகர்கள்தான் இதில் லாபம் சம்பாதிக்கிறார்கள் என கண்ணீர் வடிக்கின்றனர். இந்நிலையில் விவசாய பொருட்களுக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், அதிகமாக உற்பத்தியாகும் விவசாய பொருட்களை சேமிப்பு கிடங்குகளில் சேகரித்து அரசு விற்பனை செய்து வந்தால் நியாயமான விலைக்கு பொது மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை உயர்வு மற்றும் அதனால் ஏற்படுள்ள பாதிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்த்து தீர்வு காணவும் தமிழக விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் அவரவர் பாணியில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் இளைஞர்கள் பலர் மீம்கள் வாயிலாக உள்ளோட்டமான கருத்துக்களை காமெடியாக எடுத்து கூறி வருகின்றனர். அதன் அடிப்படையில்தான் கோவையில் நடைபெற்ற தனியார் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் கணேஷ் மற்றும் ஹேமா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வளங்கியுள்ளனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற பிற செய்தி நிறுவனங்களை சேர்ந்த செய்தியாளர்கள் மண மக்களுக்கு வெங்காயத்தை பரிசளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
இதை வெறும் நகைச்சுவையாக நம்மால் கடந்த செல்ல முடியாது. உணவுப்பொருட்களின் விலை உயர்வு என்பது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அது மட்டுமின்றி மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை எளிதாக கடந்து செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வை தவிற்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவிக்கு நகைகள் போட்டு அழகு பார்க்க ஆசை.. பிலிப்ஸ் நிறுவனத்தில் 5 கோடி மோசடி.. பலே இளைஞர்கள் சிக்கியது எப்படி?