கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் அடுத்து விராலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி. விவசாயியான இவருக்கு தண்டுக்காரன் கோயில் மலை அடிவாரத்தில் சொந்தமாகத் தோட்டம் உள்ளது. அத்தோட்டத்தில் சின்னசாமி இரவு நேர காவலுக்குச் செல்வது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் இரவு காவலுக்குச் சென்றுள்ளார். இவரது தோட்டத்திற்குள் இன்று அதிகாலை நுழைந்த ஒற்றை யானை வெங்காயம் சேமித்துவைக்கப்பட்டிருந்த பட்டறையைச் சேதப்படுத்தியது.
இதனை கண்ட சின்னசாமி, டார்ச்லைட் மூலம் ஒளி எழுப்பி யானையை விரட்ட முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த யானை சின்னசாமியை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது.
அவரின் கதறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்துசென்று படுகாயமடைந்த சின்னசாமியை மீட்டு தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் உடற்கூராய்வுக்காக கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வனத் துறையினர், ஆலாந்துறை காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொள்ள முயன்ற மனைவி கைது