கோயம்புத்தூர்: ஜல்லிக்கட்டு போட்டியைப் போல விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நாட்டுக்கோழிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழக அரசு சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகையானது தமிழக மக்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. 3 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும். பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது ஜல்லிக்கட்டு போட்டியைப் பாதுகாப்புடன் நடத்தத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டைப் போலக் கிராமப்புறங்களில் சேவல் சண்டையும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், சேவல் சண்டை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பாரம்பரிய விளையாட்டை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என கட்டு சேவலுடன் பொள்ளாச்சியில் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த விவசாயி ஒருவரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியம் இன்று ஒரு கட்டு சேவலுடன் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் காவல் துறையினர் சேவலுடன் உள்ளே செல்ல அனுமதிக்காததால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியம் கூறுகையில், “இந்தியாவில் சேவல் சண்டை என்பது பாரம்பரிய விளையாட்டு. மாமன் மச்சான் சேர்ந்து விளையாடும் சேவல் சண்டை தமிழக அரசு புறக்கணிக்கிறது. சேவல் சண்டைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி தந்தும் தமிழக அரசு விவசாயிகளைப் புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.
மனித உயிர்ப் பலி ஏற்படுத்தும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்துள்ள அரசாங்கம், சேவல் சண்டைக்கு அனுமதி மறுப்பது என்பது விவசாயிகளுக்கு வேதனையாக உள்ளது. சேவல் வளர்ப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைகிறது.
சேவல் சண்டைக்கு அனுமதி வேண்டும் என தமிழக அரசிடம் பல மனுக்கள் அனுப்பியும் இன்று வரை அதற்கு எந்த பதிலும் இல்லை. சேவல் சண்டை விரும்பிகளின் ஓட்டு வங்கி 20% மேல் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நாட்டுக்கோழிகளை ஊக்குவிக்கும் விதமாகவும் தமிழக அரசு சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என அவர் கூறினார்.