பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் காவல் துறையினர் நேற்று மதியம் ஆனைமலை சாலையில் உள்ள அய்யாமடை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வைகையில் இரு கார்கள் நின்றுள்ளது. பின்பு, அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் இரண்டு கார்களையும் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. அனைத்து ரூபாய் நோட்களையும் ஆய்வு செய்ததில் அவை கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகள் எனத் தெரியவந்தது.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவரக்ள், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த நசீர் (32), முகமது தன்சீர் (22), செரீப் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவர்களிமருந்து ஆறு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள், இரு கார்களையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், கள்ள நோட்டுகளை கேரளாவில் யாரிடமிருந்து பெற்றுவந்து, தமிழ்நாட்டில் யாரிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்துள்ளனர் என்பது குறித்து தனிப்படை அமைத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் ரூ.3 லட்சத்து 24 ஆயிரம் கள்ள நோட்டுகள் பறிமுதல்