இரண்டாம்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல், கோவை மாவட்டத்தில் சூலூர் உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில் சூலூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் போலி வாக்காளர்கள் ஏராளமானோர் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சூலூரை அடுத்த முத்து கவுண்டன் புதூர் ஊராட்சியைச் சேர்ந்த ருக்மணி என்பவரின் வீட்டு முகவரியில் 46 போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அந்த வீட்டு முகவரியில் ருக்மணி, அவரது கணவர் சண்முகம், மகள் ரேவதி, மகன் விஜயகுமார் ஆகிய நான்கு வாக்காளர்கள் மட்டுமே வசித்துவருகின்றனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் 50 பேர் அந்த முகவரியில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் அவர்களது வீட்டு முகவரியைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத 46 பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர் என்பது தெரியவந்தது. அவர்களுக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதால், அவர்கள் யார் எனக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அக்குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இன்று நடைபெறும் தேர்தலில் தங்களுடைய முகவரியைப் பயன்படுத்தி யாராவது வாக்களிக்க வந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக ருக்மணி சூலூர் காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
இதேபோன்று அதேபகுதியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் வீட்டில் 2 போலி வாக்காளர்கள் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலுக்காக ஏராளமானோர் போலி முகவரிகளைக் கொடுத்து வாக்காளர் அட்டைகளைப் பெற்று குளறுபடி செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் ஆசிரியர்கள் பறை இசையமைத்து கின்னஸ் சாதனை