ஈரோடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கணேசமூர்த்தி இன்று காலை கோவை காந்திபுரம் மதிமுக அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதிமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த எம்.பி. கணேசமூர்த்தி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர், நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க வெற்றிபெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அனைத்துப் பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவோம். முல்லை பெரியாறு, அமராவதி, கீழ்பவானி என அனைத்து விவகாரங்களிலும் கொங்கு மண்டல எம்.பிகள் இணைந்து செயல்படுவோம் என்றார்.
மேலும் அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், வாழ்வாதாரங்களை மீட்கவும், நதிநீர் பிரச்னைகளுக்காவும் தமிழ்நாடு எம்.பிகள் போராடுவோம். மத்தியில் ஆட்சியில் இல்லை என்ற குறை தெரியாத அளவு போராடி உரிமைகளை பெற்றுக்கொடுப்போம். மாநிலத்தின் நலன் காப்பதற்காக இணைந்து செயல்பாடுவோம். தமிழ்நாட்டில் தோற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள், அதைபற்றிக் கவலையில்லை. பெரும் பலத்துடன் மத்திய அரசு இருந்தாலும் அதை முறியடித்து தமிழ்நாட்டின் நலன் காக்க தேர்வான 38 எம்.பிகளும் செயல்படுவோம் என தெரிவித்தார்.