கோயம்புத்தூர்: சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கோவையில் ஓபிஎஸ் பொதுக்கூட்டம் நடத்தியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், "ஓபிஎஸ் சிறைக்குச் செல்ல தயாராகிவிட்டார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன. விரைவில் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வரும். அந்த வழக்கில் தண்டனை கிடைக்கும். அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது அதிகமாக சொத்து சேர்த்துள்ளார். அது முதலமைச்சராக இருந்த எனக்குத் தெரியும். என் மீது பழி சுமத்தி தப்பிக்கப் பார்க்கிறார். ஒபிஎஸ் திமுகவின் பி டீம். அவர் ஜெயலலிதாவிற்கு 2 கோடி கடன் கொடுத்ததாகச் சொல்வது வெட்கக்கேடானது.
ஓபிஎஸ் ஜெயலலிதாவின் விசுவாசி என கூறுகிறார். ஆனால் அவர் இடையில் வந்தவர், நாங்கள் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறோம். ஜெயலலிதாவிற்கு எதிராகப் போட்டியிட்டவருக்கு ஓபிஎஸ் சீஃப் ஏஜெண்டாக இருந்தார். நான் பகிரங்கமாக கூறுகிறேன், என் மீது உள்ள குற்றச்சாட்டுகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்.
அப்படி குற்றச்சாட்டுகள் இருந்தால் திமுகவினர் சும்மா விடுவார்களா? ஓபிஎஸ் சிறைக்குச் செல்வது உறுதி. ஓபிஎஸ் மட்டுமல்ல, யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. திமுகவினர் எவ்வளவு முயற்சி செய்தும், அதிமுகவை ஒழிக்க முடியவில்லை. ஓபிஎஸ் திமுக உடன் கூட்டணி சேர்ந்து ,பொய் சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவில் இருந்து விலகலா? - காமெடி பண்ணாதீங்க; தருமபுரி எம்.பி ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக தகவல்!