தமிழ்நாட்டில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கர்நாடகா, புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் கட்டாயம் இ பாஸ் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அந்த வகையில், கோவையை ஒட்டியுள்ள கேரளா மாநிலத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ,அம்மாநில எல்லையில் உள்ள 13 சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்," கேரளாவிலிருந்து கோவை மாவட்டத்திற்கு வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் எடுத்திருக்க வேண்டும். கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கரோனா நெகடிவ் சான்றிதழ் இல்லாவிட்டால், கோவை நகருக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கேரளாவிலிருந்து தினமும் கோவைக்கு பணிக்காக வந்து செல்பவர்களுக்கும், பல்வேறு அலுவல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வந்து செல்பவர்களுக்கு இது பொருந்தும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கேரள எல்லையில் உள்ள பொள்ளாச்சி, வாளையார், வேலந்தாவளம், ஆனைமலை, ஆனை கட்டி, வால்பாறை உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகளில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை, உள்ளாட்சித்துறையினர் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பாஸ் இல்லாமல் கேரளாவிலிருந்து வருபவர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதையும் படிங்க: தனிமனித தாக்குதல் இல்லாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது - கமல்ஹாசன்