பொள்ளாச்சியை அடுத்துள்ள டாப்சிலிப்பிற்கு தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு அதிக அளவில் வருகின்றனர். இங்கு உள்ள கோழிக்கமுத்தியில் 24 வளர்ப்பு யானைகளைச் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்க வனத் துறையினர் வாகன வசதி செய்து உள்ளனர்.
இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் டாப்சிலிப் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்துவருவதால் யானைச் சவாரியை வனத் துறையினர் ரத்து செய்தனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த டாப்சிலிப் வன அலுவலர் நவீன் கூறும்போது, தற்சமயம் கன மழை பெய்துவருவதால் யானைச் சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை குறைந்தால் சுற்றுலாப் பயணிகள் யானைச் சவாரி செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார்.