கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைகட்டி பெரியநாயக்கன்பாளையம் வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட தேடல்களில் மலையோர கிராமங்களில் நுழைந்துவிடுகின்றன.
இந்நிலையில், நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம் ராயர் ஊதுபத்தி பகுதியில் தண்ணீர் குடிக்க, கன்றுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. வனப்பகுதியொட்டியுள்ள தனியார் தோட்டத்தில் உள்ள தொட்டியில் யானைகள் தண்ணீர் குடிக்கும்போது, ஒரு வயது மதிக்கத்தக்க யானைக்கன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இந்தச் சூழலில், செய்வதறியாது திகைத்த தாய் யானை, பிளிறிக்கொண்டிருந்தது.
இந்தத் சத்தத்தினால், அருகிலிருந்தவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் யானைக்கன்றை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கைகளால் நடைபெற்ற முயற்சிகள் ஏதும் பலன் அளிக்கவில்லை.
இதனால், களத்தில் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டது. வனத் துறையினர், தண்ணீர் தொட்டியின் ஒரு பகுதியை உடைத்து, உள்ளேயிருந்த யானைக்கன்றை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, தாய் யானையுடன், கன்றை வனத் துறையினர் சேர்த்ததையடுத்து, அமைதியாக இரண்டு யானைகளும் வனப்பகுதிக்குள் சென்றன.
முன்னதாக, கன்றை மீட்கும் முயற்சியின்போது, தாய் யானை மீட்புப் பணியில் இருந்தவர்களைத் தாக்க முயற்சிசெய்தது. இதனையடுத்து பட்டாசுகளை வெடித்து, சத்தம் எழுப்பும் தாய் யானையை அருகில் வராதவாறு வனத் துறையினர் பார்த்துக்கொண்டனர். தண்ணீர் தொட்டி அருகே தீப்பற்ற வைத்து, முன்னெச்சரிக்கையுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்'