கோவை தாடகம் பகுதியில் விளை நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானை சின்னதம்பியை கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின் டாப்சிலிப் வனப்பகுதிக்குள் விட்டனர்.
இந்நிலையில் காட்டு யானை சின்னதம்பி நேற்று அதிகாலை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர், அங்கலகுறிச்சி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தது.
வனத்துறையினர் சுமார் ஆறு மணி நேரமாக போராடி யானையை ஆழியார் பெருமாள் மலை அடிவாரத்திற்கு கொண்டு சென்று வனப்பகுதிக்குள் விரட்டினர்.
ஆனால் இரவு நேரத்தில் வனத்துறையினரை மீறி மீண்டும் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களில் வந்து உலவுகிறது சின்னத்தம்பி. இன்று காலை முதல் உடுமலை வனச்சரகத்தில் உள்ள தீபழப்பட்டி கிராமத்தில் சுற்றி வருகிறது.
காலை முதல் காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் பாடுபடுகின்றனர். இன்று அதை விரட்ட முடியாதபட்சத்தில் தயார் நிலையில் உள்ள கும்கி யானையின் உதவியோடு விரட்ட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.