கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட பூண்டி பகுதியில் தாணிகண்டி கிராமம் அமைந்துள்ளது. பழங்குடியினர் வசிக்கும் இப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் கிராமத்துக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு தனது வீட்டின் முன்பு தூங்கிக்கொண்டிருந்த வெள்ளிங்கிரி என்பவரை இன்று அதிகாலை 3 மணியளவில் கிராமத்துக்குள் புகந்த காட்டு யானை தாக்கியுள்ளது.
இதில், படுகாயமடைந்த அவர் அலறியுள்ளார். இதனையடுத்து அவரின் அலறல் சத்தத்தைக் கேட்ட கிராம மக்கள் வந்து பார்த்தபோது அவர் அருகே காட்டு யானை நின்று கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனடியாக பட்டாசு வெடித்தும் ஒலி எழுப்பியும் யானையை விரட்டி வெள்ளிங்கிரியை மீட்டனர்.
பின்னர் இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வெள்ளியங்கிரிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் தண்ணீருக்காக வனவிலங்குகள் வெளியே வருவது அதிகரித்துள்ளது என்றும் வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்த இவரை யானை லேசாக தும்பிக்கையால் தள்ளிவிட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே தூங்குவதையும், வெளியே நடமாடுவதையும் தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: வனத் துறையினரின் ஜீப்பை விரட்டி முட்டித்தள்ளிய காட்டுயானை!