கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் தொடர்பாகப் புகார் தெரிவிக்கக் கூடிய வகையில் 1930 என்ற எண்ணையும், www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியையும் தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் தொடங்கப்பட்டு, நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்ட் போஸ்டல் மூலமாகவும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண மோசடி
பணமோசடி தொடர்பாக ஒரு ஆண்டில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 18 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது. பணமோசடி சம்பந்தமாக எழுந்த புகார்களில் 40 லட்சம் ரூபாய் பணம் முடக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக இதுவரை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டுள்ளது. பணமோசடி குற்றங்களை தடுக்க 1930 என்ற கட்டணமில்லா புகார் எண் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்றத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக இழந்த பணத்தை மீட்க முடியும்.
பணிகள் தீவிரம்
செயின் பறிப்பு குற்றத்தைத் தடுக்க பாதுகாப்பு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது படித்தவர்களே அதிகமாகப் பண மோசடியால் பாதிக்கப்படுகிறார்கள். மோட்டார் வழக்குப்பதிவை பொறுத்தவரை தற்போது அதற்கான சாட் ஒன்றை தயார் செய்துள்ளோம். எனவே வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டால் பதியப்பட்ட வழக்குகள் எந்தெந்த பிரிவின் கீழ் வருகிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவறு இழைத்த காவலர்களுக்கு ஆதரவாகப்பேசிய மதிமுக நிர்வாகி - வைகோவின் நடவடிக்கை என்ன?