கோயம்புத்தூர்: நாடு முழுவதும் கரோனா முதல் அலையில் சரிவைச் சந்தித்த தொழில்கள் மீண்டு வருவதற்குள், இரண்டாவது அலை உருவானதால் தொழில்கள் மீண்டும் முடங்கியுள்ளன. இதனால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் சூழலில் ஊரடங்கில் வருவாயின்றித் தவித்த கோவையைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிவருகிறார்.
ஊரடங்கால் சந்தித்த சிக்கல்
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பரத் சேகர். கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு விசேஷங்கள், திருமண நிகழ்வுகள் என ஆர்டர்களில் எப்போதும் பிஸியாக இருந்த இவருக்கு கரோனா ஊரடங்கு போதாத காலமாக மாறிவிட்டது.
ஊரடங்கால் தொழில்கள் அனைத்தும் முடங்கியதால் வருவாய் இழந்த பரத் சேகருக்கு அலுவலக வாடகை, கடனில் வாங்கிய கேமரா, உபகரணங்களுக்குத் தவணைத் தொகை கட்ட இயலாமல் போனது.
காய்கறி வியாபாரத்தைக் கையில் எடுத்த புகைப்படக் கலைஞர்
ஒரு கட்டத்தில் வீட்டு வாடகை கொடுக்க இயலாமல் உணவுக்கே வழி இல்லாத சூழல் ஏற்பட்டதால் குடும்பத்தைக் காப்பாற்ற மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் முடிவுக்கு வந்த அவர், ஊரடங்கில் தளர்வுகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள காய்கறி விற்பனையைக் கையில் எடுத்தார். தினமும் தள்ளுவண்டியில் வீடு வீடாகச் சென்று காய்கறி விற்பனை செய்து வருவாய் ஈட்டிவருகிறார் புகைப்படக் கலைஞர் பரத் சேகர்.
காய்கறி விற்பனையில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நகர்த்திவருவதாகக் கூறிய பரத் சேகர் ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான புகைப்படக் கலைஞர்கள் வேலை இழந்து வருவாய் தேடி வேறு வேலைக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை
ஸ்மைல் ப்ளீஸ் என்று சொல்லிக்கொண்டு இருந்ததான் தக்காளி வெங்காயம் என்று கூவி காய்கறி விற்பனை செய்யும் சூழலை கரோனா ஊரடங்கு ஏற்படுத்திவிட்டது என வேதனை தெரிவித்த அவர், தமிழ்நாடு அரசு ஊரடங்கில் புகைப்படக் கலைஞர்களுக்கு தளர்வுகள் அளித்து அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.
இதையும் படிங்க: அரசியல் ஆடுபுலி ஆட்டம்: தேசியளவில் எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் சரத் பவார்!