கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாட்டின் காரணமாக மனைவி பிரிந்து, வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். கூலி வேலை செய்து தனியாக வசித்து வரும் ரஞ்சித் குமாரின் பெற்றோரும் இறந்து விட்டனர். மேலும், அதே பகுதியில் திருமணமாகாமல் ஓட்டுநராக வேலை செய்து வருபவர், கோபாலகிருஷ்ணன்.
ரஞ்சித்குமார், கோபாலகிருஷ்ணனின் தாய்மாமன் மகன் ஆவார். ரஞ்சித் குமார் மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு (ஆகஸ்ட் 27) ரஞ்சித்குமார் மது வாங்கிக் கொண்டு கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து உள்ளார். இதனையடுத்து, இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி - மீட்குமா காவல் துறை?
அதனைத் தொடர்ந்து வாக்குவாதம் அதிகரித்ததால், இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், இருவரும் சரமாரியாகத் தாக்கிக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்து உள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு வெளியில் மதில் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கருங்கல்லை எடுத்து கோபாலகிருஷ்ணன், ரஞ்சித் குமாரின் தலையில் அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த ரஞ்சித் குமாரை, மீண்டும் அதே கல்லால் முகத்தில் தாக்கி உள்ளார், கோபாலகிருஷ்ணன். இதில், ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கோபாலகிருஷ்ணன் அருகில் வசிக்கும் உத்தரராஜின் தொலைபேசி மூலம், கோட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். இந்த தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், ஆம்புலன்சில் வந்த மருத்துவர் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்ததில் ரஞ்சித் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணையில், இறந்து போன ரஞ்சித் குமாரின் அம்மாவை கோபாலகிருஷ்ணன் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. குடிபோதையில், தாய்மாமன் மகனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: நிலப் பிரச்சனையில் இளைஞர் செய்த வெறிச்செயல் - முதியவருக்கு நேர்ந்தது என்ன?