திருப்பூர்: பல்லடம் போக்குவரத்து ஆய்வாளர் சுப்ரமணியம் தலைமையிலான காவலர்கள் மகாலட்சுமி நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்திய காவல்துறையினர், வானகத்தை ஓட்டி வந்த நபர் மதுபோதையில் இருந்ததால் வாகனத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் குண்ணங்கள்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது.
வழக்குப்பதிவு
மது போதையில் தலைக்கவசம், முகக்கவசம் அணியாமல் வாகனத்தை ஓட்டி வந்ததால் காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்து வாகனத்தை கைப்பற்றி அபராதம் செலுத்திவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ், காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவ்வழியே வந்த காரை வழிமறித்து காரின் முன்னே திடீரென ஓடிச்சென்று படுத்துள்ளார்.இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைபட்டது.
சிறையில் அடைப்பு
இதனையடுத்து அங்கு சென்ற பல்லடம் காவல்துறையினர் அபராதம் செலுத்தி விட்டு வாகனத்தை எடுத்து செல்லும்படி கூறியுள்ளனர். ஆனால் ரமேஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் அவரை மருத்துவ பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.