கரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் 43 நாள்களுக்குப் பிறகு கடந்த 7ஆம் தேதி விதிமுறைகளை பின்பற்றி செயல்படத் தொடங்கியது. இதனையடுத்து 8 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை அடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டாஸ்மாக் கடைகள் நேற்று (மே16) திறக்கப்பட்டன.
இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் டோக்கன்கள் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதில் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட ஏழு வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதலே மது பிரியர்கள் மதுக்கடை முன்பு குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மது விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து மது பிரியர்கள் கூறுகையில் கூலி வேலைக்கு செல்லும் தங்களால் அதிக விலைகொடுத்து மது வாங்க முடியாது தங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் மதுபானங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி டாஸ்மாக் டோக்கன் அச்சடித்து மது வாங்க வந்த 10 பேர் கைது!