உத்தரப் பிரதேச மாநிலத்தில் பட்டியலின இளம்பெண் (19) கொடூரமாகத் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் குடும்பத்தினரிடம்கூட வழங்கப்படாமல் தகனம் செய்யப்பட்டது.
இதனைக் கண்டித்தும், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச காவல் துறை ஆகியோரைக் கண்டித்தும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உத்தரப் பிரதேச அரசைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர். அது மட்டுமின்றி பட்டியலினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டியலின மக்களுக்கு ஆயுதம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 19 வயது இளம்பெண் பாலியல் கொடுமை: மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!