தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான 91 ஆயிரத்து 975 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.
முதல்கட்ட தேர்தலில் 76.19 விழுக்காடு வாக்குகளும், இரண்டாம்கட்ட தேர்தலில் 77.73 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கி ஜனவரி 3ஆம் தேதிவரை நடைபெற்றது.
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அப்போது எம்.பி. சண்முகசுந்தரம், "நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது. தேர்தலில் திமுக கிராமப்புற மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்று 70 விழுக்காடு வெற்றியைப் பெற்றுள்ளது.
எதிர்வரும் நகராட்சி, மாநகராட்சி, 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 100 விழுக்காடு வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிப்ரவரி 23ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆட்சியரிடம் மனு!