கோவை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் பல்வேறு கட்சியினரும் எந்தப் பகுதியில் எந்த வேட்பாளரை நிறுத்தலாம் என்று மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன.
இதற்கிடையே கோவை மாநகராட்சியில் 18,54ஆவது வார்டுகளில் வேட்பாளர் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாகவும் திமுகவினருக்குச் சீட்டு வழங்காமல் கூட்டணி கட்சியினருக்கு சீட் வழங்கியதைக் கண்டித்து, திமுகவினர் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வாகனத்தைச் சூழ்ந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களைத் தொடங்கி வைக்கத் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வந்திருந்தார்.
திமுகவினர் கேள்வி
அதன் தொடர்ச்சியாக அப்போது, நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் திமுகவினர் அவரது காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சரின் வாகனம் செல்லும் முன்பாக கூடிய திமுகவினர், திராவிட முன்னேற்றக்கழக கட்சியினருக்கு அப்பகுதியில் சீட்டு வழங்காமல் கூட்டணிக் கட்சிக்கு (கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) சீட்டு வழங்கியதைக் கண்டித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பதில் ஏதும் தெரிவிக்காமல் அமைச்சர் வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் அமைச்சரின் தலைமையில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்று சுகுணா அரங்கத்திற்குள் பெண்கள் உட்படக் கூடியதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் - ஆளுநர் ஆர்.என். ரவி மரியாதை!