தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி பகுதிகளில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகின்றன. குடிநீர் பிரச்னையைத் தீர்க்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, குடிநீர் வழங்க திட்டப் பணிகளை முறையாக செய்யாத அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வலியுறுத்தி திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாநகர காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் இன்று திட்டமிட்டபடி கோவை மாநகராட்சி அலுவலகத்தை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ரைட் கார்த்திக் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் கலந்துகொண்டனர். அப்போது எட்டு ஆண்டு காலமாக குடிநீர் மேலாண்மை பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறையாக செய்யவில்லை எனவும், இதுவே மக்களுக்குப் பிரச்னை ஏற்படுவதற்குக் காரணம் எனவும், கோவையில் நிலவும் குடிநீர் பிரச்னையை தீர்க்க நகராட்சி ஆணையரை சந்தித்து ஏற்கனவே பலமுறை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகம் குடிநீர் பிரச்னையை சரி செய்யவில்லை என்றும் போராட்டத்தின் போது குற்றம் சாட்டினர்.
தமிழ்நாடு முழுவதும் முறையாக குடிநீர் விநியோகப்பதில் கவனம் செலுத்த தவறிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதவி விலக வேண்டும் எனவும், கோவையில் தண்ணீர் விநியோகம் செய்ய சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், கோவை மாநகர மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின்போது திமுகவினர் வலியுறுத்தினர்.
இதனையடுத்து காவல்துறை தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.