பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடுபவர் சண்முகசுந்தரம். இவர் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலூகா, பெருமாள் புதுரை சேர்ந்தவர். பி.இ பட்டதாரியான இவர் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் அதிகாரி ரவிக் குமாரிடம் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மற்றும் பொங்கலூர் பழனிச்சாமி உடன் இருந்தனர்.
பின்னர் சண்முக சுந்திரம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்றத் தேர்திலில் வெற்றி பெற்றால் விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையான ஆனமலை நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொள்ளாச்சியில் இருந்து அனைத்து பெருநகரங்களுக்கும் ரயில் சேவை வழங்கப்படும் என உறுதியளித்தார். அதேபோல் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு பெற்று தரப்படும் என்று கூறிய அவர், தென்னை நார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சிறப்பு காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதைத்தொடர்ந்து, மேற்கு புற வழிச்சாலை திட்டம் கொண்டுவருவதற்கும், கொப்பரை கொள்முதல் விலையை நிரந்தரமாக விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.