கோயம்புத்தூர்: தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜூன் 15) நியாய விலை கடைகளில் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை ரூ.2000, 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சியில் நேற்று (ஜூன் 15) நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண உதவித்தொகை, கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு மக்களை கரோனாவின் பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின், ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி, அதிக எண்ணிக்கையில் தடுப்பூசியை பெற நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10 லட்சத்து 31 ஆயிரத்து 142 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் பணி தொடங்கியுள்ளது.
தினந்தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும். இதனை பொது மக்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றி அடுத்த மாதம் இறுதிவரை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் மருத வேல், தேவசேனாதிபதி, யுவராஜ், ராசு, கன்னிமுத்து, கிரி, சக்திவேல் உட்பட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்த நடவடிக்கை - அன்பில் மகேஷ் பொய்யாமொழி