கோவை: பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் திமுகவினர், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பொதுமக்களை மிரட்டி வாக்கு சேகரிப்பதாக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வேட்பாளர் மற்றும் நிர்வாகிகள் புகார் அளித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் சரோஜினி என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்து வரும் போது, அங்கு வரும் திமுக நிர்வாகிகள் வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் மக்களை மிரட்டி வாக்கு சேகரிக்க விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
திமுகவினர் அதிமுகவினரை வாக்கு சேகரிக்க விடாமல் ரகளையில் ஈடுபட்டு ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருடன் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் வேலையை விட்டு துரத்தி விடுவோம் என்று மிரட்டல் விடுப்பதாக கூறி அதிமுக வேட்பாளர் சரோஜினி, ஆனைமலை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கார்த்திக் அப்புசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தனர்
வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து மக்களை மிரட்டி வரும் திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பிங்க் அக்டோபர்: ஜொலிக்கும் மலைக்கோட்டை விழிப்புணர்வின் அடையாளம்