கோயம்புத்தூர்: திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்கள் பற்றி அவதூறாக பேசிய, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மீது திமுக வழக்கறிஞர்கள் அணியினர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
இந்த புகார் குறித்து கூறிய அவர்கள், கடந்த 29-ஆம் தேதி கோவை வி.கே.கே மேனன் சாலையில் பாஜக சார்பில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய வானதி சீனிவாசன், “திமுக கவுன்சிலர் மற்றும் எம்எல்ஏக்கள் ஒரு வீட்டில் இருக்க மாட்டார்கள். திமுகவிற்காக ஒரு பண்பாடு வைத்து உள்ளார்கள். அவர்கள் காலையில் ஒரு வீட்டிலும், மாலையில் ஒரு வீட்டிலும் இருப்பார்கள். அது அவர்களின் ஜீன்” என பேசியதாக தெரிவித்தனர்.
மேலும் அவர், திமுக கவுன்சிலர்கள், எம்.எல்.ஏக்களை பற்றி அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேசியதாகவும் தெரிவித்தனர். வானதி சீனிவாசன் பேசிய வீடியோ பகிரப்பட்ட நிலையில் தற்போது அந்த வீடியோவை கண்டதாக தெரிவித்தனர். மேலும், கோவை மாவட்டம் முழுவதும் திமுக பகுதி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சமூகவலைத்தள பதிவுக் காரணமாக தமிழ்நாடு பாஜகவின் மாநிலச் செயலாளரான எஸ்.ஜி.சூர்யாவை மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து இருந்தனர்.
விசாரணையில் மதுரை பெண்ணாடம் பேரூராட்சி 12வது வார்டு உறுப்பினராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த விஸ்வநாதன். இவர் மலம் கலந்த நீரில் தூய்மைப் பணியாளரை கட்டாயப்படுத்தி வேலை செய்யச் சொன்னதாகவும், அதனால் ஒவ்வாமை ஏற்பட்டு அந்த தொழிலாளி இறந்துவிட்டதாகவும் எஸ்.ஜி.சூர்யா குற்றம் சாட்டியிருந்தார். மேலும், இதனை கண்டு கொள்ளாமல் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் என்றும் கூறினார்.
இதனை அடுத்து போலீசார் எஸ்.ஜி.சூர்யா மீது நடவடிக்கை எடுத்து இருந்தனர். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களை அறநிலையத்துறை அதிகாரிகள், போலீசார் தாக்கியதாக அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட விவகாரத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை விசாரிக்க காவல் நிலையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தீட்சிதர்கள் தாக்கியதாக அவதூறாக பதிவு:பாஜக மாநில செயலாளர் எஸ்ஜி சூர்யாவிற்கு சம்மன்!