கோயம்புத்தூர்: விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும் சபாநாயகருமான தனபால், தேர்தலில் வெற்றி பெற்று சென்றவர் மீண்டும் தொகுதி பக்கம் வரவில்லை. மக்களுக்கான எந்த ஒரு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தன்னை ஒரு விவசாயி என்று சொல்லக்கூடிய முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகளுக்கு எந்த ஒரு நல்லதையும் செய்யவில்லை. தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக போராடிய தமிழ்நாட்டு விவசாயிகளை நேரில் சென்று பார்க்கவில்லை. தன்னை விவசாயி எனக்கூறும் அவர் விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரித்துள்ளார்.
முதலமைச்சருக்கு 'குடிமராமத்து நாயகன்' என பேனர்கள் வைத்துள்ளனர். ஆனால் நிஜமாகவே குடிமராமத்து செய்வதாக கணக்கு காட்டி கொள்ளையடித்துள்ளனர். நீர்நிலைகள் தூர்வாரப்படவில்லை, தூர்வாரப்படாமல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார்.
கடந்த ஜனவரி மாதம் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் தெரிவித்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் அதையே அறிவித்துள்ளார். அதை முழுமையாக செய்து முடிக்க திமுக ஆட்சிக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய கனிமொழி, ”முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல் திமுகவும், அதிமுகவும் பரம்பரை பகையாளிகள்தான். தற்போது அந்த பகை முழு வடிவில் நமக்கு எதிராக வந்து நிற்கிறது. நமக்கு எதிராக நிற்பது அதிமுக மட்டுமல்ல, அதிமுகவை முன்னிறுத்தி பூதாகரமாக இருக்கக் கூடிய பாஜகவும்தான். பாஜகவுடன் இருப்பது கருத்தியல் பகை, கொள்கை பகை .
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் உழைப்பை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உள்ளவர்களை இந்த தேர்தலில் நாம் சந்திக்கிறோம். தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது அதிமுகவிடம் மட்டுமில்லை. நம்முடன் கருத்தியல் பகையாக உள்ளவர்களிடமும் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும். அதிமுக ஆட்சியில் பினாமி ஆட்சி. அவர்கள் பாஜக சொல்வதை கேட்டு செய்யும் ஆட்சி. கட்சியைக்கூட அவர்கள் அடகு வைத்துள்ளனர். கட்சியில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதைகூட மோடி, அமித் ஷா என்ன சொல்கிறார்கள் என்பதை பார்த்துதான் முடிவு எடுக்கின்றனர்.
திமுகவை ஆட்சியில் அமர வைப்பது என்பது மறுபடியும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளை ஆட்சிக்கட்டிலில் அமர வைப்பது என புரிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக மக்களின் குறைகளை கேட்கிறது - கனிமொழி