கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குள்பட்ட குனியமுத்தூர் பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுகவினர் தேர்தல் அலுவலர்களுக்கும், வருமானவரித் துறை அலுவலர்களுக்கும் புகார் அளத்தனர்.
இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர், பறக்கும் படை அலுவலர்கள் பணப்பட்டுவாடா நடப்பதாகக் கூறப்பட்ட மளிகைக் கடை உரிமையாளர் தங்கராஜை, குனியமுத்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
திமுகவினர் விரட்டியடிப்பு
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் தொகுதி திமுக தலைமை முகவரும், வழக்கறிஞருமான மயில்வாகனம் காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்த காவல் துறையினர் அவரை விரட்டியடித்துள்ளனர்.
இதையடுத்து நடந்தவற்றைச் சொல்லாமல் தன்னை காவல் துறையினர் மிரட்டுவதால், தொண்டாமுத்தூர் தொகுதியில் நியாயப்படி தேர்தல் நடைபெறாது எனவும், இந்தத் தொகுதியில் தேர்தலைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் எனவும் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக தலைமை முகவர் மயில்வாகனம் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் வீடுபோல் காவல் நிலையம்
பணப்பட்டுவாடா குறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கு நேரில் வந்த ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
குனியமுத்தூர் காவல் துறையினர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் இல்லம்போல் செயல்படுவதாகவும், அந்தக் காவல் நிலைய செயல்பாடுகள் அதிமுகவுக்குச் சாதகமாகவே இருப்பதாகவும் திமுகவினர் குற்றஞ்சாட்டினர்.
பணப்பட்டுவாடா செய்யப்பட்டிருந்த இடத்திலிருந்து பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், 13 ஆயிரம் ரூபாய் மட்டுமே பறிமுதல் எனக் காவல் துறையினர் சொல்வதை நம்பும்படி இல்லை என திமுகவினர் தெரிவித்துள்ளனர்.
உரிய விசாரணை நடத்த திமுக கோரிக்கை
பணம் பறிமுதல் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், தொண்டாமுத்தூர் தொகுதியில் தேர்தலை நிறுத்திவைக்க வேண்டும் எனவும் திமுகவினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையே குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு வந்த வருமானவரித் துறை அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: சுங்கத் துறையின் 'நீலக் கழுகு' சோதனை: ரூ.50 லட்சம் பறிமுதல்!