கரோனா பாதிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆட்சியர் ராசாமணி, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்ட அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரோனா வைரஸ் தொற்றினை தடுக்க தமிழ்நாட்டில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 7ஆயிரத்து 920 குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 300 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதில் 234 பேருக்கு நோய் இல்லை என்றும் 64 பேருக்கு உறுதி எனவும் முடிவுகள் வந்துள்ளது. அதில் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேபோல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பிய 2,332 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கபடுகின்றனர். பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களான அரசு பொது மருத்துவமனை, காய்கறி அங்காடி, உழவர் சந்தை போன்ற 16 இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார்
இதையும் படிங்க...தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி!