கோயம்புத்தூர்: பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய்கள் செல்லும் பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்களில் வாய்க்காலை ஒட்டி உள்ள மின் இணைப்புகளை அரசு துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை கண்டித்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் அருகில் பிஏபி பாசன விவசாயிகள் நேற்று (டிச.8) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் தமிழ்நாடு விவசாய சங்கம், ஏர்முனை இளைஞர் அணி கோவை, திருப்பூர் விவசாயிகள் என 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பொள்ளாச்சி பிஏபி பாசன சங்க விவசாயிகள் இரண்டாம் கட்டம் போராட்டமாக 1967 இல் இயற்றப்பட்ட சட்டத்தை வைத்து விவசாயிகள் கிணற்றுகளில் பொருத்தப்பட்டுள்ள மோட்டார்களை மின்சாரத்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்த வருகின்றனர். முதலமைச்சர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரிடம் சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டு உள்ளோம். விவசாயிகளுக்கான அரசு ஆனால் விவசாயிகள் வஞ்சிக்கும் விதமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டினர்.
மாநில அரசு விவசாய நலன் கருதி நல்லதொரு நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பொள்ளாச்சியில் இருந்து விவசாயிகள் குடும்பத்துடன் முதலமைச்சரை சந்திக்க நடைபயணம் மேற்கொள்வோம் என்றனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமி, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி செல்லமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்காவிடம் விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தீவிரமடையும் மாண்டஸ் புயல்: தமிழ்நாட்டில் 31 மாவட்ட பள்ளிகளுக்கு லீவ்.. 3 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'