பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தைக் கண்டித்து, புதுச்சேரி திராவிடர் விடுதலை கழகத்தினர் ராஜா திரையரங்கம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது ஆளும் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொள்ளாச்சி காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணி நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் பொள்ளாச்சி சம்பவங்களில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக முக்கிய பிரமுகர்களுக்கு தமிழக அரசு துணை போகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
இந்த சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், போராட்டத்தைக் கைவிடுமாறு, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாததை அடுத்து மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.