கரோனா பாதிப்பு காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்கள் சிறு, குறு தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகள் மூலம் கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு, குறு தொழில் தொடங்க சிறப்பு கடனுதவி வழங்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டி, காசிப்பட்டணம், சுந்தர கவுண்டனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 25 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 25 லட்ச ரூபாய் கடனுதவிக்கான காசோலைகளை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, "கரோனா பாதிப்பு காரணமாக கறவை பசு, வெள்ளாடுகள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்ததும் ஜூன் மாதம் ஒன்றரை லட்சம் பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள், இரண்டரை லட்சம் பேருக்கு நாட்டுக்கோழிகள், 12 ஆயிரத்து 500 பேருக்கு கறவை பசுக்கள் வழங்கும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக முதலமைச்சர் உத்தரவு பெறப்பட்டு ஆணை பிறப்பித்துள்ளார். அதேபோல் கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணிகள் ஜூன் மாதம் தொடங்கி விரைவில் நிரப்பப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் சேலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை!