தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம் தம்மம்பதி கல்லாங்குத்து பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், பழங்குடி மக்கள் குடியிருப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகள் அஸ்திவாரங்கள் மட்டும் அமைக்கப்பட்டு, அதுவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதைக் கண்டித்தும், ஒவ்வொரு வீட்டிற்கும் 3 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பழங்குடி மக்களை பாதுகாக்க வேண்டும், பழங்குடி மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திய போது கொலை மிரட்டல் விடுக்கிற வாகை சேவை அறக்கட்டளையின் மீது நடவடிக்கை வேண்டும் என்றும், குடிநீர், பாதை, மின்சாரம், பொதுக்கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை துணை வட்டாட்சியர் வாசுதேவன் ,வருவாய் ஆய்வாளர் செல்லத்துரை, காவல் உதவி ஆய்வாளர் வள்ளியம்மாள், பேரூராட்சி அலுவலர்கள் ஆகியோர், போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், போராட்டக்காரர்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைப்பதாகவும், விரைவில் உயர் அலுவலர்கள் பார்வையிட கிராமத்துக்கு வருவதாக சொன்னதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பங்கேற்றனர்.