கோயம்புத்தூர்: நாடாளுமன்றத்தில் பெரியாரின் கருத்தைக் குறிப்பிட்டு எம்.எம்.அப்துல்லா ஆற்றிய சிறப்புரையானது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனைக் கண்டித்து பொள்ளாச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் சபாநாயகருக்கு பெரியார் ஆற்றிய சிறப்புகள் குறித்த பல புத்தகங்களை, திமுகவினர் தபால் மூலம் அனுப்பி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு-காஷ்மீா் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நேற்று (டிச.11) நடைபெற்ற விவாதத்தில் திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, பெரியாரின் கருத்தைக் குறிப்பிட்டு தனி மனித சுதந்திரம் குறித்துப் பேசினார். அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர்கள், திமுக எம்பியின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டதையடுத்து, எம்.எம்.அப்துல்லா குறிப்பிட்ட பெரியாரின் கருத்து அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு, பாஜகவைக் கண்டிக்கும் விதமாக பொள்ளாச்சியில் திமுக நகரச் செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், திமுகவினர் தபால் நிலையம் முன்பு பெரியார் போட்டோ ஒட்டி, மத்திய அரசைக் கண்டிக்கும் விதமாக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோருக்கு பெரியார் குறித்து சிறப்பு புத்தகங்கள், அவர் ஆற்றிய பணிகள் அடங்கிய புத்தகங்கள் ஆகியவற்றை தபால் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த போராட்டத்தில் நகர துணைச் செயலாளர் தர்மராஜ், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம், வார்டு உறுப்பினர் பாத்திமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயலால் யுஜிசி நெட் தேர்வை தவறவிட்டவர்களுக்கு நாளை மறுதேர்வு!