தமிழ்நாடு முழுவதும் செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது பல்வேறு அமைப்பினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல் கடலூர் மாவட்டம் அண்ணா பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு புதுநகர் காவலர்கள் ரஞ்சித், ரங்கராஜ், அசோக் ஆகிய மூன்று பேர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை காவலர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மூவரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் நிர்வாகப் பணி காரணமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடலூரில் பல காவலர்கள் இருக்கும்பொழுது குறிப்பிட்ட இந்த மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அரசைக் கண்டித்தும், இடமாற்றத்திற்கு உத்தரவு அளித்த காவல் துறை அலுவலர்களைக் கண்டித்தும், இடமாற்றத்தை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தெரிவித்ததாவது, "காவல் துறையினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்க கூடாதா?
காவல் துறையில் உயர் அலுவலர்கள் சாதி சங்கத் தலைவரின் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டிருக்கிறார்கள். எனவே காவலர்கள் மூன்று பேரின் இடமாற்றம் கண்டிக்கத்தக்கது" என்றார்.
இதையும் படிங்க: பெரியார் சிலை மீது காவி சாயம்: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியாரிய உணர்வாளர்கள்