கோவை: டிசம்பர் மாதம் 11ஆம் தேதி ஈஷா யோகா மையத்திற்குப் பயிற்சிக்காக வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியேறி மாயமான நிலையில், நேற்று செம்மேடு பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து அவரது உறவினர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சுபஸ்ரீ-யின் கணவர் பழனிக்குமார் இறந்து கிடப்பது சுபஸ்ரீ தான் என்பதை உறுதி செய்தார். இதனை அடுத்து சுபஸ்ரீ-யின் உடலானது கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது.
இந்நிலையில் சுபஸ்ரீ மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சுபஸ்ரீ மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்திட வேண்டும் எனக் கூறி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,'சுபஸ்ரீ உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் உடனடியாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களது குடும்ப வழக்கத்திற்கு மாறாக சுபஸ்ரீ உடல் எரியூட்டப்பட்டது.
இது கோவை மக்களிடையே மிகப்பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈஷாவில் தொடர்ந்து இதுபோன்று மர்ம மரணங்கள் நடைபெற்று வருகிறது. எனவே தமிழக அரசு இது குறித்து ஈஷாவை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுபஸ்ரீ மரணம் குறித்து விசாரிக்க மாநில அரசு விசாரணை குழுவை அமைக்க வேண்டும்' எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஒப்பந்த செவிலியர்களுக்கு மீண்டும் தற்காலிகப் பணிதான்.. அமைச்சர் மா.சு விளக்கம்!