ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, இந்த பாடலை கேட்டாலே அனைவருக்கும் சிறுவயதில் சைக்கிள் ஓட்டிய ஞாபகம் தான் முதலில் வரும், முன்பெல்லாம் சைக்கிள் ஓட்டுவது என்பது பலருக்கு கனவாக இருந்தது. சொந்தமாக சைக்கிள் இல்லாவிட்டால் வாடகைக்கு சைக்கிள் எடுத்து ஓட்டாத ஆள்களே இல்லை.
சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியாக இருக்கும்:
இதன் காரணமாக கிராமங்களில் வாடகை சைக்கிள் கடைகள் அதிகமாக காணப்படும். ஆனால், தற்போது அவையெல்லாம் காணாமல் போகிவிட்டது. சைக்கிள் ஓட்டுவதால் நுரையீரல் கால் தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சியாக இருந்த நிலையில் நோய் பாதிப்பு குறைந்தே காணப்பட்டது. சைக்கிள் ஓட்டும் பழக்கம் குறைந்ததால் பெரும்பாலானோர் உடல் பருமனால் சக்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர்.
இதனையடுத்து, மீண்டும் சைக்கிள் ஓட்டும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் கிராமத்திலிருந்த இந்தப் பழக்கங்கள் தற்போது நகரத்தில் அதிகரித்து வருகிறது. மேலும், இதற்கென பிரத்தியேக குழுக்கள் எல்லாம் தொடங்கப்பட்டு மாதம்தோறும் நீண்டதூரம் குழுவாக சைக்கிள் பயணம் மேற்கொள்வது உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சைக்கிள் பிரியர்கள் அதிகரித்துள்ளனர். மாதம் ஒரு முறை தங்களது சைக்கிள் ஓட்டும் நண்பர்களுடம் சேர்ந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து வருகின்றனர்.
சைக்கிள் ஓட்டுவது புத்துணர்ச்சியளிக்கிறது:
இது குறித்து வெஸ்டன் வேலி சைக்கிள் கிளப் உரிமையாளர் ராபர்ட் ஆண்டனிராஜ் கூறியதாவது, “கடந்த பல மாதங்களாக கரோனா பாதிப்பினால் சைக்கிள் ஓட்டுவது குறைந்ததால் வீட்டிலேயே கிடைக்கும் நேரங்களில் உடற்பயிற்சி செய்தோம். மீண்டும் ஊரடங்கு தளர்வு காரணமாக சைக்கிள் ஓட்டுவது எங்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
மேலும், கரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியிருந்த சமயத்தில் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்தனர். மேலும், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொண்டதால் தற்போது சைக்கிள் ஓட்டுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சைக்கிள் ஓட்டுவதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதால் சைக்கிள் மோகமும் அதிகரித்துள்ளது. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் 40 சதவீதம் சைக்கிள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் சைக்கிள்கள் விற்பனையாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காற்று மாசுவை குறைக்க சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி!