கோயம்புத்தூர்: கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவு உண்பதற்காக கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர் சாலையிலுள்ள பிரபல உணவகமான அன்னபூர்னா உணவகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு காலிஃபிளவர் தோசை, பன்னீர் தோசை, இட்லி, புரோட்டா உள்ளிட்டவற்றை ஆர்டர் கொடுத்துள்ளார். ஆர்டர் செய்த உணவு வகைகள் வந்த நிலையில் காலிஃபிளவர் தோசையை சாப்பிட முற்பட்டபோது அதில் கரப்பான் பூச்சி ஒன்று இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து பிரசாந்த், ஓட்டல் நிர்வாகத்தினரிடம் புகார் அளிக்கவே, அவர்கள் சாதாரணமாக பதிலளித்து விட்டு அதற்கு பதிலாக வேறு தோசை கொண்டு வருவதாக கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்காத வாடிக்கையாளர் பிரசாந்த் சமையலறை முழுவதையும் தூய்மைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு உணவகத்தினர் மறுத்ததை அடுத்து வாடிக்கையாளர் உணவு பாதுகாப்பு துறையினரிடம் இன்று புகார் அளிக்க உள்ளதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கோவையில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கிய தோசையில் கரப்பான்பூச்சி இருந்த வீடியோ காட்சி சமூக வளைதளங்களில் பரவி வருகிறது.