கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து கடைகளையும் திறக்கக் கூடாது என்று அரசு அறிவித்திருந்தது. ஆனால் கோவை குனியமுத்தூர் அருகே சட்டவிரோதமாக அரசு அறிவிப்பை மீறி இறைச்சிக் கடை ஒன்று அதிகாலையில் கள்ளத்தனமாக திறந்து இறைச்சியை மக்களுக்கு விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
அதில் இறைச்சிக் கடையின் முன்புறமானது மூடப்பட்டிருந்தது. மேலும் கடைக்கு பின் புறம் இறைச்சியை விற்பனை செய்ததற்கான அடையாளமாக இறைச்சியின் கழிவுகள் அங்கு கொட்டி கிடந்தன. இதனால் அங்கு இறைச்சி விற்பனையானதை உறுதி செய்த குனியமுத்தூர் காவல் துறையினர் கடை உரிமையாளரை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கடையின் உரிமையாளர் ராமநாதன், கடையில் வேலை செய்து வந்த பிரபு ஆகிய இருவரையும் காவல் துறையினர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் இருவரும் இறைச்சியை விற்கவில்லை என்று முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வந்துள்ளனர்.
மேலும் காவல் துறையினர் அவர்களிடம் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவல் துறையினரை தாக்கியதாக தெரிந்தது. அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்கள் மீது அரசு விதியை மீறி சட்டவிரோதமாக விற்பனை செய்ததும், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'தங்கக் கடத்தல் வழக்கு... முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து ரகசிய அழைப்பு' - முதலமைச்சர் செயலர் திடீர் பதவி நீக்கம்