கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் நேற்று சுவரிடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்தை இன்று நேரில் பார்வையிட்ட சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், "வீட்டின் சுற்றுச்சுவரை இவ்வளவு உயரமாக கட்டவேண்டிய அவசியமில்லை.
சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இல்லையென இரு தினங்களுக்கு முன்பே உரிமையாளரிடம் தெரிவிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இச்சம்பவத்திற்கு வீட்டின் உரிமையாளரும், அரசு அலுவலர்களும் பொறுப்பேற்க வேண்டும். இப்பகுதியில் பாதுகாப்பற்ற சுற்றுச்சுவர்களை நீக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பவத்திற்கெதிராக போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து, வழக்கு போட்டிருப்பது கண்மூடித்தனமான ஒன்று. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப வேண்டும். இப்பகுதி மக்கள் அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். இரவோடு இரவாக உயிரிழந்தவர்களை தீ மூட்டி எரிக்க வேண்டிய அவசியமென்ன" என்றார்.
இதையும் படிங்க: சுவர் இடிந்து விழுந்த 17 பேரின் உடல் ஒரே இடத்தில் தகனம்!