கோயம்புத்தூர்: கோவை அவினாசி சாலையில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை சார்பில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு விழா மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு 2.11 கோடி ரூபாய் நிதி வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
விழாவில் பேசிய அண்ணாமலை, "கொங்கு வாசனை குறையாத அன்பு அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த வேலைத் திறன் உடையவர். கட்சிக்காக சொந்த சொத்துகளை விற்றவர் இவர். கொங்கின் பெருமையை உயர்த்தியவர் சி.பி.ஆர். ஆளுநரை கவுரவப்படுத்துவது எங்கள் ஒவ்வொருவரையும் கவுரவப்படுத்துவது போன்றது" என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் இரண்டு பேர்தான் எமனை வென்றவர்கள். ஒருவர் எம்.ஜி.ஆர், மற்றொருவர் கே.எம்.சி.எச் மருத்துவமனை நிறுவனர் நல்லா பழனிசாமி. தனது 35வது வயதிலேயே ஐபிஎஸ் பணியைத் துறந்தவர், அண்ணாமலை.
தமிழ்நாட்டில் ஆளும் இயக்கத்திற்கு எதிராக ஓங்கி ஒலிக்கும் குரல், அண்ணாமலை. இதை அரசியலுக்காக சொல்லவில்லை. மருத்துவமனை சார்பில் கொடுக்கப்பட்ட இரண்டு கோடி நிதியை அண்ணாமலை தனது லெட்டர்பேடில் பிரதமருக்கு அனுப்ப வேண்டும். கரோனாவுக்கு மருந்து இல்லாத சூழலில் எண்ணற்ற ஏழை நாடுகளுக்கு முதல் முதலாக இந்தியாவிலிருந்து கோவிட் தடுப்பூசி அன்பளிப்பாக அனுப்பப்பட்டது.
வெற்றியைப் பெற போகிறவர், அண்ணாமலை. வெற்றியையும், முழுப் பலனையும் தமிழ்நாடு பார்க்க வேண்டும். மேலும், அண்ணாமலை ஒரு நாள் தமிழ்நாட்டிற்கும் தலைவராக வர வேண்டும்" என வாழ்த்துவதாகத் தெரிவித்தார்.
மேலும், அவர் நேற்றைய தினம் (ஜூலை 6) சேலம் மாவட்டத்தில் நகைக்கடை திறப்பு விழாவின்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "தமிழ்நாடு அரசும், ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும். அரசின் அணுகுமுறையும், அனுசரணையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். அப்படி இருக்கிறபோது ஆளுநரின் அணுகுமுறையும் அதை சார்ந்ததாக மாறும்.
மாநில அரசின் அணுகுமுறை மற்றும் ஆளுநரின் அணுகுமுறை இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாக இருக்க வேண்டும். மாநில அரசும் மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். அப்போது ஆளுநரின் அணுகுமுறையும் மக்கள் நலன் சார்ந்தே அமையும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆளுநர் அவர் கடமையைச் செய்கிறார். அதை தமிழ்நாடு அரசு வேறொரு கண்கொண்டு பார்ப்பதாக நான் உணர்கிறேன்.
எனக்கு தெரிந்தவரையில் தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாட்டு மக்கள் நலனில் அதிக அக்கறைக் கொண்டவராக இருக்கிறார். தமிழ்நாடு அரசு, ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், ஆளுநரை அனுசரித்து அவருடைய முழு ஆதரவையும் பெற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை இருக்க வேண்டும். ஏனெனில், ஆளுநர் என்பவர் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் இல்லை" என கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக அமைச்சர்களை காப்பாற்ற ஆளுநர் மாளிகை பொய் கூறுவதா? - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆவேசம்!