கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் வனத்தை ஒட்டியுள்ள கல்லார் என்னுமிடத்தில் கடந்த 15ஆம் தேதி வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை கடித்து பசுமாடு ஒன்று வாய் சிதறி பலியானது.
இதுபோன்ற சம்பவங்கள் கோவை வனக்கோட்ட பகுதியில் அடிக்கடி நடப்பது, காட்டை ஒட்டியுள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் மட்டுமின்றி யானைகள் உள்ளிட்ட வன உயிரினங்களும் கொல்லப்பட்டுவருவது, வளர்ப்பு விலங்குகள் அவுட்டுக்காயால் மரணிப்பது தொடர்ந்துவந்தது.
இதனையடுத்து வன உயிரின ஆர்வலர்கள் அவுட்டுக்காய் தயாரித்து வேட்டையாடும் குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து கைதுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்து, இவர்களுக்கு வெடி மருந்துகள் எங்கிருந்து கிடைக்கிறது, யார் தயாரித்து விற்பனை செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து ஒட்டுமொத்த கும்பலையும் பிடிப்பது அவசியம் எனவும் வலியுறுத்திவந்தனர்.
இந்நிலையில், கல்லார் பகுதியில் நாட்டு வெடி வைத்து பசுமாடு பலியான வழக்கில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த குணசேகரன், ஸ்ரீகாந்த், கிருஷ்ணன் ஆகியோரை வனத் துறையினர் கைதுசெய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பிரகாஷ் என்ற நபரைத் தேடிவருகின்றனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களிடமிருந்து இரண்டு நாட்டு வெடிகளையும் பறிமுதல்செய்துள்ளனர். கோயில் விழாக்களில் பயன்படுத்தும் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை வாங்கிவந்து அதில் உள்ள வெடி மருந்துகளை மட்டும் எடுத்து அதனுடன் சிறு சிறு கூர்மையான இரும்புத் துகள்கள், சிறு உரைவிலும் தீப்பொறி உருவாக்கும் வெங்கிச்சான் கற்கள் போன்றவற்றை நிரப்பி சற்றே அழுத்தம் கொடுத்தால் வெடித்து சிதறும் வகையில் மிக நுட்பமாக இந்த வெடி தயாரிக்கப்படுவதாகக் கூறும் வனத் துறையினர், இந்த வெடியை காட்டு பன்றி போன்ற ஊன் உண்ணி விலங்குகள் சாப்பிடும் வகையில் அதன் மீது கோழி, ஆட்டுக் குடலைத் தடவி வைப்பது, யானை, மான், காட்டெருது போன்ற விலங்குகளை ஈர்க்க பலாப்பழச் சுளையின் மீதுள்ள நார்களைச் சுற்றிவைப்பது என வெடிகளைத் தயாரிப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972இன் கீழ் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி மருந்து பயன்பாடு காரணமாக மேட்டுப்பாளையம் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க... நாட்டு வெடி வெடித்து காவலர் காயம் - தனியார் மருத்துவமனையில் சிகிச்சை