கோவை கண்ணப்பன் நகரில் வசித்துவரும் மணிகண்டனும் அவருடைய மனைவியும் எருக்கம்பனி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அடிக்கும் வேலை செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெட்ரோல் பங்கிலுள்ள அறையில் மணிகண்டனின் மனைவி துணி மாற்றுவதை அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் சுபாஷ், அவரது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டன் பெட்ரோல் பங்க் மேலாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், சாய்பாபா காலனி காவல் துறையினரிடமும் மணிகண்டன் புகார் தெரிவித்துள்ளார். ஆதாரத்திற்காக அந்த செல்போனையும் காவலரிடம் தந்துள்ளார். அதன்பின்பு அந்த செல்போனை உடைத்துவிட்டு, இனிமேல் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று கூறி அவரை அங்கிருந்து அனுப்பி விட்டதாகத் தெரிகிறது.
இதன்பின்பு சுபாஷை வேலையை விட்டு நீக்கியுள்ளனர். இந்நிலையில், மணிகண்டன் பெட்ரோல் திருடியதாகக் கூறி, மேலாளர் சங்கர் கணேஷ், கவிதாசன், சரவணன் ஆகியோர் மணிகண்டனை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவருடைய இடுப்பெலும்பு உடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மணிகண்டன் தெரிவிக்கையில் சுபாஷ், சரவணன், கவிதாசன், சங்கர் கணேஷ் ஆகிய நால்வரும் கூட்டாகச் சேர்ந்து தான் இந்தச் செயலை செய்துள்ளனர் என்றும்; சுபாஷை வேலையை விட்டு நீக்கியது போல் என்னையும் வேலையை விட்டு நீக்க வேண்டும் என்பதற்காகவே... என்மீது பெட்ரோல் திருடியதாக பொய் குற்றச்சாட்டு கூறி அடித்துவிட்டனர் என்றும் மணிகண்டன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறார் ஆபாசப் படங்கள் பதிவிறக்கம்; போக்சோவில் இருவர் கைது!