கோவை: கரோனா நோய்த்தொற்று படிப்படியாகக் குறைந்த நிலையில் கடந்த சில நாள்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கோவையில் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியரால் கோவையில் கூடுதல் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. அத்தியாவசியக் கடைகளை தவிர்த்து இதர கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணிவரை இயங்க அனுமதி.
2. கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட கிராஸ்கட், 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7 தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, துடியலூர் சந்திப்பு, ரைஸ் மில், சாலை ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளை தவிர்த்து இதர கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை.
3. உணவகங்கள் காலை 8-5 மணிவரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி.
4. அனைத்து மார்க்கெட்களிலும் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி.
5. கேரள - தமிழ்நாடு எல்லைகளில் இருந்து கோவைக்குள் வருவோர் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சான்று இருக்க வேண்டும். அல்லது இரண்டு தவணை செலுத்திய தடுப்பூசி சான்றிதழ் இருக்க வேண்டும். இல்லையெனில் சோதனை சாவடிகளிலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அதேசமயம் கோவையில் மருதமலை, பேரூர், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோயில்களில் ஆடி கிருத்திகை, ஆடிப் பெருக்கு ஆடி அமாவாசை ஆகிய (2,3,8) ஆகிய நாள்களில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி தர்பனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் சாமிக்கு பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் முதல் ஜிகா தொற்று... சுகாதாரத்துறை தகவல்!